Sunday 30 August, 2009

கூகுள் வழங்கும் லேபிள்- அறிந்ததும், அறியாததும்.


கூகுள் வழங்கும் லேபிள் என்பது நாம் எழுதும் இடுகைகளை ஒரு வரிசைபின் கீழ் (உ.தா- கவிதை, தொழில்நுட்பம், அனுபவம் என்று) வகைப்படுத்தி வைப்பதற்கு உதவுகிறது. புதிதாக நம் வலைத்தளத்திற்கு வருகை தருபவர்கள் லேபிளை பார்த்து, அவர்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள் என்பது தெரிந்த விடயம்தான்.

வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் அதைப் பற்றி தெரியாமல் இடுகைப் பெட்டியில் எனக்குத் தோன்றிய தலைப்பெல்லாம் இட்டுவிட்டேன். பின்பு லேபிளின் பயன்பாடு பற்றி தெரிந்ததும் அந்த கெஜட்டை சேர்த்த பிறகுதான் நான் செய்த தவறுகள் தெரிய ஆரம்பித்தது. லேபிள் மிக நீண்டு தெரிந்தது. அதன் பிறகு பழைய இடுகைகளையெல்லாம் எடிட் பகுதிக்கு சென்று லேபிளை ஒரு குறிப்பிட்ட வரிசைக்குள் வருமாறு மாற்றிவிட்டேன். இப்போது பார்ப்பவர்களுக்கு கண்களை உறுத்தாமல் தெளிவாக இருக்கும்.

இப்படி மாற்றுவதன் மூலம் எந்தவித பாதிப்பும் உண்டாகாது. நீங்கள் இடுகைகளின் லேபிளை மாற்றும்போது தேதியை ஒன்றும் செய்யாமல் லேபிளை மட்டும் மாற்றிவிட்டு பப்ளிஷ் செய்தால் போதும்.நாம் முன்பு இடுகை இட்ட தேதிகளிலேயே வெளியாகும்.

புதிய இடுகைகள் இடும்போது இதை எந்த வரிசையின் கீழ் கொண்டு வரலாம் என்பதற்கு அந்த இடுகைப் பெட்டியின் அருகில் இருக்கும் Show all என்பதை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.


தமிழ்மணம் திரட்டி பல தலைப்புகளின் கீழ் நமது இடுகைகளை திரட்டுகிறது. என்றாலும் பெரும்பான்மையாக- நகைச்சுவை- மொக்கை/நையாண்டி, அரசியல்/சமூகம், அனுபவம்/நிகழ்வுகள், கவிதை/சிறுகதை, திரைப்படம்/விமர்சனம், சமையல்குறிப்பு/சமையல் போன்ற தலைப்புகள் இட்டால் முகப்பு பக்கத்தில் அதன் தலைப்புகளில் தெரியும். படிப்பவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாகவும் இருக்கும்.



இந்த இடுகை உங்களுக்கு சிறிதளவேணும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்.


வாரா வாரம் திங்கட்கிழமை பதிவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப செய்திகள், அல்லது எளிய ஆலோசனைகளை இந்த வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். விருப்பம் இருந்தால் தங்கள் மெயில் முகவரியை பின்னூட்டத்தில் அல்லது என் தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.

Wednesday 26 August, 2009

சில பிளாக்குகளை படிக்க முடியவில்லையே ஏன்?

கீழே உள்ள வலைத்தளத்தின் படத்தைப் பாருங்கள். எழுத்துருக்கள் படிக்க முடியாமல் காட்சியளிக்கிறதா?


இதுபோல் சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதன்லேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா என்று எனக்கு தெரிந்தவரையில் நோண்டிப் பார்த்தேன்.
சில வலைத்தளங்களில் கருத்துரைகளை (Comments) க்ளிக் செய்து ஓப்பன் ஆகும் விண்டோவில் அசல் இடுகையை காண்பி (Show Original Post) என்பதை க்ளிக் செய்து படிப்பேன். சில வலைத்தளங்களில் Settings-ல் Comments- பகுதியில் Embedded below post என்று தேர்வு செய்திருப்பார்கள். அதனால் மேற்சொன்ன முறையில் படிக்க முடியாது போய்விடுகிறது. அதே போல்தான் Pop-up window முறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் படிக்க முடியாது. எனவே Full page என்ற முறையை தேர்ந்தெடுங்கள்.
எனக்கு தெரிந்து மற்றொரு முறை... லேவுட் பகுதிக்கு செல்லுங்கள். Fonts and Colors என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். அதில் சைடில் தெரியும் பாக்ஸில் Text Font -ஐ க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தைப் போல தொன்றும்.



அதில் நான் ‘டிக்’ செய்திருக்கும் Arial அல்லது Verdana என்பதை ‘டிக்’ செய்திடுங்கள். பின்பு சேவ் செய்திடுங்கள்.இப்போது அனைத்து ப்ரவுசர்களிலும் உங்கள் வலைத்தளத்தினை படிக்க முடியும்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். தங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அதையும் தெரிவியுங்கள்.

Tuesday 25 August, 2009

பாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பதிவுகளுக்கும் பாலோவர் ஆவதெப்படி?

புதிதாக வலைப்பதிவுகள் தொடங்கும்போது பாலோவர் விட்ஜெட் அமைக்க முடியவில்லை. விட்ஜெட் சென்றால் சோதனை முயற்சிகளில் உள்ளது என்பது மாதிரியான பதில் வருகிறது. அல்லது சில பதிவர்கள் இந்த விட்ஜெட்டை அமைக்காமல் இருக்கிறார்கள். நமக்கு அந்த வலைப்பதிவுகளை தொடர்ந்து படிக்க ஆவல். அப்போ நமக்கு பிடித்த அந்த வலைப் பக்கங்களுக்கு பாலோவர் ஆக முடியாதா?


எதற்குமே மனமிருந்தால் மார்க்கம் (வழி) உண்டு. அதுபோலவே பாலோவர் பிரச்சினைக்கும் வழி உண்டு.


உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்? என்ற எனது முந்திய இடுகையை பாருங்கள். அதில் கீழ்க்காணும் படம் வரை உள்ளதுபடி செய்யுங்கள்.




படத்தில் வட்டமிட்டு காணப்படும் கட்டத்தில் நீங்கள் பாலோவராக விரும்பும் வலைப்பக்கங்களின் முகவரியை (URL) கொடுத்து சேவ் செய்யுங்கள். இப்போது உங்கள் விருப்பமான வலைப்பக்கங்கள் உங்கள் வரிசைப்பட்டியலில் வந்து சேர்ந்திருக்கும்.

அப்புறம் என்ன ஜமாய்க்க வேண்டியதுதானே!

Monday 24 August, 2009

உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்?

'கற்றது கை மண்ணளவு' அப்படின்னு சொல்வாங்க. வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் கண்ணைக்கட்டி காற்றில் விட்டது போலிருந்தது. வலைத்தளம் ஆரம்பிக்கவே நிறைய பயிற்சிகள் செய்தேன் என்பது வேறு விசயம். பின்பு பலரின் வலைத்தளங்களுக்கு சென்று பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதுபோல் எனக்கு தெரிந்ததை இங்கு உங்களுக்கு சொல்கிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்களுக்காக அல்ல... என்னைப்போல் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள, ஆனால் வழி தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு!

விரும்பி வாசிக்கும் சில வலைத்தளத்திற்கு நீ்ங்கள் பாலோவராகவும் ஆகியிருப்பீர்கள். அப்படி ஆகியிருப்பவர்கள், அவர்களின் வலைத்தளத்தில் புதிய பதிவு போடுவதை எப்படி அறிவீர்கள்?

அவரின் வலைத்தளத்திற்கு சென்று பார்போம்! இதென்ன புதுசா கேட்கிறே?என்று என்னை முறைக்காதீர்கள்!அவர்களின் வலைதளத்திற்கு சென்றுதான் பார்ப்பேன் என்பது உங்கள் பதிலாக இருக்குமென்றால், இனி அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினந்தோறும் உங்கள் வலைத்தளத்திற்கு தவறாது வருகை புரிவீர்கள் தானே அப்புறமென்ன!உங்கள் வலைத்திலிருந்தே (அங்கு சென்று பார்க்காமலேயே) புதிய பதிவு போடப்பட்டிருக்கிறதா? என்பைத அறிய எளிய வழி உள்ளது.

முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று, டேஸ்போர்டை திறந்துகொள்ளுங்கள். ஆட்கெஜட் பகுதியை கிளிக் செய்க. அதில், பிளாக் லிஸ்ட் என்பதில் க்ளிக் செய்க.
தோன்றும் பகுதியில் தலைப்பில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை (உ.தா= நண்பர்களின் வலைத்தளம்) கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு விருப்பமான ஆப்சனை தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஆட்லிஸ்ட் என்பதை க்ளிக் செய்யு்ஙகள்.
கீழே உள்ளதுபோல் தோன்றும். அதில் நான் பின்தொடரும் அனைத்தும் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பின்பு ஆட் செய்யுங்கள். அதன்பிறகு கேட்கும் கேள்விகள் உங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு சேவ் செய்க. பிறகு லேவுட் பகுதி தோன்றும். அங்கு சேவ் செய்துகொண்டு, உங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

இப்போது உங்கள் விருப்பமானவர்களின் வலைதளத்ததில் ஒரு புதிய பதிவு இடப்பட்டால் உங்கள் வலைத்தளத்திலிருந்து பார்த்து, உடன் அந்த தளத்தை க்ளிக் செய்து உடன் பின்னூட்டமிட்டு கலக்கலாம். தவறவிடமாட்டீர்கள், இனி!

உங்கள் நண்பரும் மகிழ்வார்!

இதற்கு பின்னூட்டமிட மறந்துவிடாதீர்கள்!





இந்த இடுகையும் இலக்கியாவிலிருந்து உங்களுக்காக மீள் பதிவிடப்பட்டது.

எமது அடுத்த இடுகை- பாலோவர் இல்லாத வலைப்பக்கங்களிலும் பாலோவர் ஆகலாம்.

Sunday 23 August, 2009

வலைத்தளத்தில் கவிதை எழுத நான்பட்டபாடு!

முதன் முதலில் வலைப்பதிவர் பட்டறையில் கலந்துகொண்டபோதுதான் இப்படி நமக்கே நமக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கலாம், நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன்.

எனக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கியவுடன் முதல் இடுகை கவிதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கவிதையை நோட்பேடில் டைப் செய்து காப்பி செய்து எடுத்துக்கொண்டு இணைய மையத்திற்கு சென்றேன். இடுகை இட்டபின் அது கவிதையாக இல்லாமல் பாரா கிராபாகவே எடுத்துக்கொண்டது.

சரி என்று தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து என்டர் தட்டினேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கவிதை வெளியிடும் என் ஆசையை தடுத்தது. நானும் பலமுறை முயற்சி செய்தேன். முடியவில்லை. வலைத்தளத்திற்கு புதியவன் என்பதால் தெரிந்தவர்கள் அதிகமில்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லை என்றார்கள். அப்ப இந்த கொடுமை நமக்கு மட்டும்தானா? இதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.

இதற்கிடையில் பதிவர் சந்திப்பு (டிசம்பர்27, 2008) தி.நகர். நேடசன் பூங்காவில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஆதிசாவின் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். நான் செல்லும் முன்பே சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாமல் அமைதியாக நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.

என்னருகே அமர்ந்திருந்த ஒருவர்(கார்க்கி என்று பின்பு விசாரித்து தெரிந்து கொண்டேன்) என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் என் பிரச்சனையை சொன்னேன். அவர் 'தமிழ் எழுதி' கொண்டு எழுதினால் இந்தப்பிரச்சனை வராது என்றார்.

சரி, ஒரு புதிய ஐடியா கிடைத்திருக்கிறது என்று சந்தோசமாக சென்றேன். ஆனால் எனக்கு இதிலும் தோல்வியே! சரி இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை நாமே நோண்டிப்பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இடுகைப்பெட்டியில் இருக்கும் html திருத்து என்றதன் மேல் கிளிக் செய்தேன். ஏதோ மாற்றம் தெரிந்தது. பிறகு கவிதையில் தேவைப்பட்ட இடத்தில் வைத்து என்டர் தட்ட என் முயற்சி வெற்றி பெற்றது.

இது ஒரு மீள்பதிவு. (இலக்கியாவில் வெளியிடப்பட்டது.)

தற்போது NHM ரைட்டர் மூலம் நேரிடையாகவே கவிதைகள் டைப் செய்து வெளியிடுகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.

Thursday 20 August, 2009

புதிய வலைப்பக்கம் ஏன்?



வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.

இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். வலையுலகிற்கு புதிது புதிதாக பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வரும் பலரும் வலையுலகில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கிறார்கள். நாமும் அவர்களுக்கு முடிந்தவரையில் உதவி வருகிறோம்.பல இடுகைகளையும் இட்டு விளக்கம் தருகிறோம். அந்த இடுகைகள் எல்லாம் காலப்போக்கில் எங்கிருக்கிறது என்று தெரியாதபடிக்கு நிறைய இடுகைகள் இடுவதால் புதியவர்கள் கேட்கும்போது தேட வேண்டியிருக்கிறது.

இனி அப்படி தேடக்கூடாது. அவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சந்தேகங்கள் தீர வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

வலையுலகம் தொடர்பாக தாங்கள் இதுவரை ஏதேனும் இடுகைகளை இட்டிருப்பின் அதன் லிங்கை தலைப்போடு தரலாம். அதை அனைவரின் பார்வைக்கு படும்படி வெளியிடுகிறேன். அதேபோல் புதிய பதிவர்கள் இங்கு தங்களுக்கு ஏற்படும் இடுகையிடல், புகைப்படம் சேர்த்தல், இடுகைகளை திருத்துதல் போன்ற சந்தேகங்களை கேட்கலாம். அதற்கான விளக்கத்தை நண்பர்கள் தெரிவிப்பார்கள்.

அதோடு வலைப்பதிவர்கள் வலைப்பதிவில் தங்ளுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அதை தாங்கள் தீர்த்த விதத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அப்படி பகிர்ந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் மெயில் முகவரியை தெரிவித்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வழக்கம்போல் எனது வலைப்பக்கத்திற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டு ஆதரிக்கும் நண்பர்கள் இதற்கும் தங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்.

ம்! ஆரம்பியுங்கள்!!